|
279 |
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.1 |
280 | பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.2
|
281 | அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே. | 7.28.3
|
282 | போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.4
|
283 | மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.5
|
284 | மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.6
|
285 | எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.7
|
286 | வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே. | 7.28.8
|
287 | அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே. | 7.28.9
|
288 | காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. | 7.28.10
|