சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கற்குடி தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 27வது திருப்பதிகம்)


7.27 திருக்கற்குடி

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

 
விடையா ருங்கொடியாய் வெறியார்மலர்க் கொன்றையினாய்	
படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே	
கடியார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற	
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.	7.27.1

மறையோர் வானவரும் தொழுதேத்தி வணங்கநின்ற	
இறைவா எம்பெருமான் எனக்கின்னமு தாயவனே	
கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற	
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே.		7.27.2

சிலையால் முப்புரங்கள் பொடியாகச் சிதைத்தவனே	
மலைமேல் மாமருந்தே மடமாதிடங் கொண்டவனே	
கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற	
அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே.	7.27.3

செய்யார் மேனியனே திருநீல மிடற்றினனே	
மையார் கண்ணிபங்கா மதயானை உரித்தவனே	
கையார் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னிநின்ற	
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.		7.27.4

சந்தார் வெண்குழையாய் சரிகோவண ஆடையனே	
பந்தா ரும்விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே	
கந்தார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற	
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே.	7.27.5

அரையார் கீளடுகோ வணமும்மர வும்மசைத்து 	
விரையார் கொன்றையுடன் விளங்கும்பிறை மேலுடையாய்	
கரையா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற	
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே.	7.27.6

பாரார் விண்ணவரும் பரவிப்பணிந் தேத்தநின்ற	
சீரார் மேனியனே திகழ்நீல மிடற்றினனே	
காரார் பூம்பொழில்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற	
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சலென்னே.		7.27.7

நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற	
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யும்	
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற	
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.	7.27.8

வருங்கா லன்னுயிரை மடியத்திரு மெல்விரலால்	
பெரும்பா லன்றனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே	
கரும்பா ரும்வயல்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற	
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே.	7.27.9

அலையார் தண்புனல்சூழ்ந் தழகாகி விழவமரும்	
கலையார் மாதவர்சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்	
சிலையார் வாணுதலாள் நல்லசிங்கடி யப்பன்உரை	
விலையார் மாலைவல்லார் வியன்மூவுல காள்பவரே.		7.27.10

	        - திருச்சிற்றம்பலம் -

  • இத்தலம் சோழ நாட்டிலுள்ளது; இஃது காவிரி தென்கரையில் உள்ள 4வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - உச்சிவரதநாயகர்; தேவியார் - அஞ்சனாட்சியம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page