சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

இசை கேட்க:-

Get the Flash Player to see this player.

7.26 திருக்காளத்தி

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

259

செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

7.26.1
260

இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

7.26.2
261

படையார் வெண்மழுவா பகலோன்பல் லுகுத்தவனே
விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே.

7.26.3
262

மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய குருவேயுன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள்
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

7.26.4
263

செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினாற்
துஞ்சேன் நானொருகாற் றொழுதேன்றிருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

7.26.5
264

பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றறியேன்
செய்யவ னாகிவந்திங் கிடரானவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே விளங்குந்திருக் காளத்தியென்
ஐயநுன் றன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

7.26.6
265

கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதவென்னுள்
குடியாக் கோயில்கொண்ட குளிர்வார்சடை யெங்குழகா
முடியால் வானவர்கள் முயங்குந்திருக் காளத்தியாய்
அடியேன் உன்னையல்லால் அறியேன்மற் றொருவரையே.

7.26.7
266

நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே.

7.26.8
267

தளிர்போல் மெல்லடியாள் தனைஆகத் தமர்ந்தருளி
எளிவாய் வந்தென்னுள்ளம் புகுதவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையுந் திருக்காளத்தி யுள்ளிருந்த
ஒளியே உன்னையல்லால் இனியொன்றும் உணரேனே.

7.26.9
268

காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள்
ஆரா வின்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன
சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே.

7.26.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளத்திநாதர், தேவியார் - ஞானப்பூங்கோதையம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page