சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருமழபாடி தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 24வது திருப்பதிகம்)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

7.24 திருமழபாடி

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து	
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே	
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே	
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.		7.24.1

கீளார் கோவணமும் திருநீறுமெய் பூசிஉன்தன்	
தாளே வந்தடைந்தேன் தலைவாஎனை ஏன்றுகொள்நீ	
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே	
கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.		7.24.2
	
எம்மான் எம்மனையென் தனக்கெட்டனைச் சார்வாகார்
இம்மா யப்பிறவி பிறந்தேஇறந் தெய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே	
அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.	7.24.3

பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந்	
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்	
வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே	
அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.		7.24.4

கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப்	
பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே	
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே	
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.	7.24.5

நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்தனக்கே	
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ	
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே	
ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.		7.24.6

சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல	
வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே	
மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே	
எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.		7.24.7

வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாம்	
செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே	
மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே	
ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.		7.24.8

நெறியே நின்மலனே நெடுமால்அயன் போற்றிசெய்யும்	
குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா	
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே	
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.		7.24.9

ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை	
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்	
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்	
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.			7.24.10

	        - திருச்சிற்றம்பலம் -

  • இத்தலம் சோழ நாட்டிலுள்ளது; இஃது காவிரி வடகரையில் உள்ள 54வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - வச்சிரத்தம்பநாதர்; தேவியார் - அழகம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page