சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கழிப்பாலை தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 23வது திருப்பதிகம்)


7.23 திருக்கழிப்பாலை

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

செடியேன் தீவினையல் தடுமாறக் கண்டாலும்	
அடியான் ஆவஎனா தொழிதல் தகவாமே	
முடிமேல் மாமதியும் அரவும் உடன்துயிலும்	
வடிவே தாம்உடையார் மகிழுங்கழிப் பாலையதே.		7.23.1

எங்கே னும்மிருந்துன் அடியேன் உனைநினைந்தால்	
அங்கே வந்தென்னோடும் உடனாகி நின்றருளி	
இங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும்	
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.			7.23.2

ஒறுத்தாய் நின்னருளில் அடியேன் பிழைத்தனகள்	
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்துச்	
செறுத்தாய் வேலைவிட மறியாமல் உண்டுகண்டம்	
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.		7.23.3

சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்குகண்ணீர்	
அரும்பா நிற்குமனத் தடியாரொடும் அன்புசெய்வன்	
விரும்பேன் உன்னையல்லால் ஒருதெய்வம் என்மனத்தால்	
கரும்பா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.			7.23.4

ஒழிப்பாய் என்வினையை உகப்பாய் முனிந்தருளித்	
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலைஆவ ணம்உடையாய்	
கழிப்பால் கண்டடங்கச் சுழியேந்து மாமறுகிற்	
கழிப்பா லைமருவுங் கனலேந்து கையானே.			7.23.5

ஆர்த்தாய் ஆடரவை அரையார் புலிஅதள்மேற்	
போர்த்தாய் ஆனையின்தோல் உரிவை புலால்நாறக்	
காத்தாய் தொண்டுசெய்வார் வினைகள் அவைபோகப்	
பார்த்தா னுக்கிடமாம் பழியில்கழிப் பாலையதே.		7.23.6

பருத்தாள் வன்பகட்டைப் படமாகமுன் பற்றிஅதள்	
உரித்தாய் ஆனையின்தோல் உலகந்தொழும் உத்தமனே	
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர்கடியுங்	
கருத்தா தண்கழனிக் கழிப்பாலை மேயானே.			7.23.7

படைத்தாய் ஞாலமெலாம் படர்புன்சடை எம்பரமா	
உடைத்தாய் வேள்விதனை உமையாளையோர் கூறுடையாய்	
அடர்த்தாய் வல்லரக்கன் தலைபத்தொடு தோள்நெரியக்	
கடற்சா ருங்கழனிக் கழிப்பாலை மேயானே.			7.23.8

பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே	
மெய்யே நின்றெரியும் விளக்கேஒத்த தேவர்பிரான்	
செய்யா னுங்கரிய நிறத்தானுந் தெரிவரியான்	
மையார் கண்ணியொடு மகிழ்வான்கழிப் பாலையதே.		7.23.9

பழிசே ரில்புகழான் பரமன் பரமேட்டி	
கழியார் செல்வமல்குங் கழிப்பாலை மேயானைத்	
தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்	
வழுவா மாலைவல்லார் வானோர்உல காள்பவரே.		7.23.10

	        - திருச்சிற்றம்பலம் -

  • இத்தலம் சோழ நாட்டிலுள்ளது; இஃது காவிரி வடகரையில் உள்ள 4வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்; தேவியார் - பொற்பதவேதநாயகியம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page