சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பழமண்ணிப்படிக்கரை தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 22வது திருப்பதிகம்)


7.22 திருப்பழமண்ணிப்படிக்கரை

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

முன்னவன் எங்கள் பிரான்	
  முதல் காண்பரி தாயபிரான்	
சென்னியில் எங்கள்பிரான்	
  திருநீலமி டற்றெம்பிரான்	
மன்னிய எங்கள்பிரான்	
  மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்	
பன்னிய எங்கள்பிரான்	
  பழமண்ணிப் படிக்கரையே.		7.22.1

அண்டக பாலஞ்சென்னி	
  அடிமேல்அலர் இட்டுநல்ல	
தொண்டங் கடிபரவித்	
  தொழுதேத்திநின் றாடும்இடம்	
வெண்டிங்கள் வெண்மழுவன்	
  விரையார்கதிர் மூவிலைய	
பண்டங்கன் மேயவிடம் 	
  பழமண்ணிப் படிக்கரையே.		7.22.2

ஆடுமின் அன்புடையீர்	
  அடிக்காட்பட்ட தூளிகொண்டு	
சூடுமின் தொண்டருள்ளீர் 	
  உமரோடெமர் சூழவந்து	
வாடும்இவ் வாழ்க்கைதன்னை	
  வருந்தாமல் திருந்தச்சென்று	
பாடுமின் பத்தருள்ளீர் 	
  பழமண்ணிப் படிக்கரையே.		7.22.3

அடுதலை யேபுரிந்தான்	
  அவைஅந்தர மூவெயிலும்	
கெடுதலை யேபுரிந்தான்	
  கிளருஞ்சிலை நாணியிற்கோல்	
நடுதலை யேபுரிந்தான்	
  நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்	
படுதலை யேபுரிந்தான் 	
  பழமண்ணிப் படிக்கரையே.		7.22.4

உங்கைக ளாற்கூப்பி	
  உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்	
மங்கையோர் கூறுடையான்	
  வானோர்முத லாயபிரான்	
அங்கையில் வெண்மழுவன்	
  அலையார்கதிர் மூவிலைய	
பங்கய பாதனிடம் 	
  பழமண்ணிப் படிக்கரையே.		7.22.5

செடிபடத் தீவிளைத்தான்	
  சிலையார்மதில் செம்புனஞ்சேர்	
கொடிபடு மூரிவெள்ளை	
  எருதேற்றையும் ஏறக்கொண்டான்	
கடியவன் காலன்தன்னைக்	
  கறுத்தான்கழற் செம்பவளப்	
படியவன் பாசுபதன்	
  பழமண்ணிப் படிக்கரையே.		7.22.6

கடுத்தவன் தேர்கொண்டோடிக் 	
  கயிலாயநன் மாமலையை	
எடுத்தவன் ஈரைந்துவாய்	
  அரக்கன்முடி பத்தலற	
விடுத்தவன் கைநரம்பால்	
  வேதகீதங்கள் பாடலுறப்	
படுத்தவன் பால்வெண்ணீ£ற்றன்	
  பழமண்ணிப் படிக்கரையே.		7.22.7

திரிவன மும்மதிலும்	
  எரித்தான் இமையோர்பெருமான்	
அரியவன் *அட்டபுட்பம்	
  அவைகொண்டடி போற்றிநல்ல	
கரியவன் நான்முகனும் 	
  அடியும்முடி காண்பரிய	
பரியவன் பாசுபதன்	
  பழமண்ணிப் படிக்கரையே.		7.22.8

வெற்றரைக் கற்றமணும்	
  விரையாதுவிண் டாலமுண்ணுந்	
துற்றரைத் துற்றறுப்பான்	
  துன்னஆடைத் தொழிலுடையீர்	
பெற்றரைப் பித்தரென்று	
  கருதேன்மின் படிக்கரையுள்	
பற்றரைப் பற்றிநின்று	
  பழிபாவங்கள் தீர்மின்களே		7.22.9

பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப்	
  பழமண்ணிப் படிக்கரையை	
அல்லியந் தாமரைத்தார்	
  ஆரூரன் உரைத்ததமிழ்	
சொல்லுதல் கேட்டல்வல்லா	
  ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்	
எல்லியும் நன்பகலும்	
  இடர்கூருதல் இல்லையன்றே.		7.22.10

	    - திருச்சிற்றம்பலம் -

 • இத்தலம் சோழ நாட்டிலுள்ளது; இஃது காவிரி வடகரையில் உள்ள 30வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - நீலகண்டேசுவரர்; தேவியார் - அமிர்தகரவல்லி.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page