சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கச்சிமேற்றளி தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 21வது திருப்பதிகம்)


7.21 திருக்கச்சிமேற்றளி

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

209

நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும்
எந்தாய் உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.

7.21.1
210

ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ் திருமேற் றளியுறையும்
மாட்டே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.

7.21.2
211

மோறாந் தோரொருகால் நினையா திருந்தாலும்
வேறா வந்தென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித் திருமேற் றளியுறையும்
ஏறே உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே.

7.21.3
212

உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென் இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலுந் திருமேற் றளியுறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்தேத்த மாட்டேனே.

7.21.4
213

எம்மான் எம்மனையென் றவரிட் டிறந்தொழிந்தார்
மெய்ம்மா லாயினதீர்த் தருள்செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா வீருரியாய் கனமேற் றளியுறையும்
பெம்மான் உன்னையல்லால் பெரிதேத்த மாட்டேனே.

7.21.5
214

நானேல் உன்னடியே நினைந்தேன் நினைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்தாயென் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திருமேற் றளியுறையுங்
கோனே உன்னையல்லாற் குளிர்ந்தேத்த மாட்டேனே.

7.21.6
215

கையார் வெஞ்சிலைநா ணதன்மேற் சரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத் திருமேற் றளியுறையும்
ஐயா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

7.21.7
216

விரையார் கொன்றையினாய் விமலாஇனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உடலில்லுயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திருமேற் றளியுறையும்
அரையா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

7.21.8
217

நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.

7.21.9
218

பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற் றிருமேற் றளிச்சிவனை
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் ஆரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

7.21.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேற்றளியீசுவரர், தேவியார் - காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page