சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கோளிலி தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 20வது திருப்பதிகம்)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

7.20 திருக்கோளிலி

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

நீள நினைந்தடியேன் உமை
  நித்தலும் கைதொழுவேன்	
வாளன கண்மடவாள் அவள்	
  வாடி வருந்தாமே	
கோளிலி எம்பெருமான் குண்டை	
  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்	
ஆளிலை எம்பெருமான் அவை	
  அட்டித் தரப்பணியே.			7.20.1

வண்டம ருங்குழலாள் உமை
  நங்கையோர் பங்குடையாய்	
விண்டவர் தம்புரமூன் றெரி	
  செய்தஎம் வேதியனே	
தெண்திரை நீர்வயல்சூழ் திருக்	
  கோளிலி எம்பெருமான்	
அண்டம தாயவனே அவை	
  அட்டித் தரப்பணியே.			7.20.2

பாதியோர் பெண்ணைவைத்தாய் பட
  ருஞ்சடைக் கங்கைவைத்தாய்	
மாதர்நல் லார் வருத்தம் அது	
  நீயும் அறிதியன்றே	
கோதில் பொழில்புடைசூழ் குண்டை	
  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்	
ஆதியே அற்புதனே அவை	
  அட்டித் தரப்பணியே.			7.20.3

சொல்லுவ தென்னுனை நான்தொண்டை
  வாயுமை நங்கையைநீ	
புல்கி இடத்தில்வைத் தாய்க் கொரு	
  பூசல்செய் தார்உளரோ	
கொல்லை வளம்புறவிற் குண்டை	
  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்	
அல்லல் களைந்தடியேற் கவை	
  அட்டித் தரப்பணியே.			7.20.4

முல்லை முறுவல்உமை ஓரு
  பங்குடை முக்கணனே	
பல்லுயர் வெண்டலையிற் பலி	
  கொண்டுழல் பாசுபதா	
கொல்லை வளம்புறவில் திருக்	
  கோளிலி எம்பெருமான்	
அல்லல் களைந்தடியேற் கவை	
  அட்டித் தரப்பணியே.			7.20.5

குரவம ருங்குழலாள் உமை
  நங்கையோர் பங்குடையாய்	
பரவை பசிவருத்தம் அது	
  நீயும் அறிதியன்றே	
குரவம ரும்பொழில்சூழ் குண்டை	
  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்	
அரவம் அசைத்தவனே அவை	
  அட்டித் தரப்பணியே.			7.20.6

எம்பெரு மானுனையே நினைந்
  தேத்துவன் எப்பொழுதும்	
வம்பம ருங்குழலாள் ஓரு	
  பாகம் அமர்ந்தவனே	
செம்பொனின் மாளிகை சூழ்திருக்	
  கோளிலி எம்பெருமான்	
அன்பது வாயடியேற் கவை	
  அட்டித் தரப்பணியே.			7.20.7

அரக்கன் முடிகரங்கள் அடர்த்
  திட்டஎம் ஆதிப்பிரான்	
பரக்கும் அரவல்குலாள் பர	
  வையவள் வாடுகின்றாள்	
குரக்கினங்கள் குதிகொள் குண்டை	
  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்	
இரக்கம தாயடி யேற்கவை	
  அட்டித் தரப்பணியே.			7.20.8

பண்டைய மால்பிர மன்பறந்
  தும்மிடந் தும்மயர்ந்தும்	
கண்டில ராயவர்கள் கழல்	
  காண்பரி தாயபிரான்	
தெண்திரை நீர்வயல்சூழ் திருக்	
  கோளிலி எம்பெருமான்	
அண்டம தாயவனே அவை	
  அட்டித் தரப்பணியே.			7.20.9

கொல்லை வளம்புறவில் திருக்
  கோளிலி மேயவனை	
நல்லவர் தாம்பரவுந் திரு	
  நாவல வூரனவன்	
நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்	
  தேத்திய பத்தும்வல்லார்	
அல்லல் களைந்துலகின் அண்டர்	
  வானுல காள்பவரே.			7.20.10

	    - திருச்சிற்றம்பலம் -

 • இத்தலம் சோழ நாட்டிலுள்ளது; இஃது காவிரி தென்கரையில் உள்ள 123வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - கோளிலிநாதர்; தேவியார் - வண்டமர் பூங்குழலி.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page