சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஏழாம் திருமுறை)


7.18 திருவேள்விக்குடி

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

178

மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு
மாகச்சிந் திக்கினல்லாற்
காப்பது வேள்விக் குடிதண்
டுருத்தியெங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாமிவர்க் காட்படோமே.

7.18.1
179

கட்டக்காட் டில்நட மாடுவரி
யாவர்க்குங் காட்சியொண்ணார்
சுட்டவெண் ணீறணிந் தாடுவர்
பாடுவர் தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த்
தோம்பி மறைபயில்வார்
அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்
நாமிவர்க் காட்படோமே.

7.18.2
180

பேருமோர் ஆயிரம் பேருடை
யார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்
பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமு
துண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல்
நாமிவர்க் காட்படோமே.

7.18.3
181

ஏனக்கொம் பும்மிள ஆமையும்
பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட் டிற்றொண்டர் கண்டன
சொல்லியுங் காமுறவே
மானைத்தோல் ஒன்றை உடுத்துப்
புலித்தோல் பியற்குமிட்டு
யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்
நாமிவர்க் காட்படோமே.

7.18.4
182

ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்
ஊரிடு பிச்சையல்லாற்
பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்
ஏறியோர் பூதந்தம்பாற்
பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ
றும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்
நாமிவர்க் காட்படோமே.

7.18.5
183

குறவனார் தம்மகள் தம்மக
னார்மண வாட்டிகொல்லை
மறவனா ராயங்கோர் பன்றிப்பின்
போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதிய
ராயங்கோர் சோர்வுபடா
அறவனார் ஆவத றிந்தோமேல்
நாமிவர்க் காட்படோமே.

7.18.6
184

பித்தரை ஒத்தொரு பெற்றியர்
நற்றவை என்னைப்பெற்ற
முத்தவை தம்மனை தந்தைக்குந்
தவ்வைக்குந் தம்பிரானார்
செத்தவர் தந்தலை யிற்பலி
கொள்வதே செல்வமாகில்
அத்தவம் ஆவத றிந்தோமேல்
நாமிவர்க் காட்படோமே.

7.18.7
185

உம்பரான் ஊழியான் ஆழியான்
ஓங்கி மலருறைவான்
தம்பரம் அல்லவர் சிந்திப்ப
வர்தடு மாற்றறுப்பார்
எம்பரம் அல்லவர் என்னெஞ்சத்
துள்ளும் இருப்பதாகில்
அம்பரம் ஆவத றிந்தோமேல்
நாமிவர்க் காட்படோமே.

7.18.8
186

இந்திர னுக்கும் இராவண
னுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மாமறை
பாடுவர் மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முக
னும்முட னாய்த்தனியே
அந்தரஞ் செல்வத றிந்தோமேல்
நாமிவர்க் காட்படோமே.

7.18.9
187

கூடலர் மன்னன் குலநாவ
லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி
யார்க்கடி மைவழுவார்
நாடவல் லதொண்டன் ஆரூரன்
ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்
திருப்பது பண்டமன்றே.

7.18.10

திருச்சிற்றம்பலம்


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page