7.15 திருநாட்டியத்தான்குடி

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 15வது திருப்பதிகம்)


7.15 திருநாட்டியத்தான்குடி

பண் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

 
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன்	
  புறங்காட் டாடல்கண் டிகழேன்	
பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்	
  பிறவே னாகிலும் மறவேன்	
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தால்	
  கருதீ ராகிலுங் கருதி	
நானே லும்மடி பாடுதல் ஒழியேன்	
  நாட்டியத் தான்குடி நம்பீ.	        7.15.1

கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்	
  டெல்லியில் ஆடலைக் கவர்வன்	
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை	
  சொல்லாய் திப்பிய மூர்த்தி	
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல	
  மணியே மாணிக்க வண்ணா	
நச்சேன் ஒருவரை நானுமை அல்லால்	
  நாட்டியத் தான்குடி நம்பீ.	        7.15.2

அஞ்சா தேயஉமக் காட்செய வல்லேன்	
  யாதினுக் காசைப் படுகேன்	
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை	
  பங்கா எம்பர மேட்டீ	
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த	
  மணியே மாணிக்க வண்ணா	
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ	
  நாட்டியத் தான்குடி நம்பீ.	        7.15.3


கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை	
  கல்லா தேபல கற்றேன்	
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்	
  தம்முடை நீதியை நினைய	
வல்லே னல்லேன் பொன்னடி பரவ	
  மாட்டேன் மறுமையை நினைய	
நல்லே னல்லேன் நானுமக் கல்லால்	
  நாட்டியத் தான்குடி நம்பீ.	        7.15.4


மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்	
  கருதா தார்தமைக் கருதேன்	
ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன்	
  உம்மடி யடைந்தவர்க் கடிமைப்	
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்	
  பாடியும் நாடியும் அறிய	
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்	
  நாட்டியத் தான்குடி நம்பீ.	        7.15.5

படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்	
  படுத்தா யென்றல்லல் பறையேன்	
குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே	
  கோனே கூற்றுதைத் தானே	
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும்	
  மறையோ தீமங்கை பங்கா	
நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே	
  நாட்டியத் தான்குடி நம்பீ.	        7.15.6

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த	
  அழகா அமரர்கள் தலைவா	
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர	
  நினைந்தேன் உள்ளமுள் ளளவும்	
உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன்	
  உகவீ ராகிலும் உகப்பன்	
நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன்	
  நாட்டியத் தான்குடி நம்பீ.	        7.15.7

கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக்	
  கருதிடிற் கண்கணீர் பில்கும்	
பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன்	
  பசுவே ஏறிலும் பழியேன்	
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்	
  மாட்டேன் மறுமையை நினையேன்	
நலியேன் ஒருவரை நானுமை அல்லால்	
  நாட்டியத் தான்குடி நம்பீ.	        7.15.8

குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்	
  கொண்டா ராகிலுங் கொள்ளக்	
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்	
  கண்ணா நின்னல தறியேன்	
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு	
  தொழுதேன் என்வினை போக	
நண்டா டும்வயறல் தண்டலை வேலி	
  நாட்டியத் தான்குடி நம்பீ.	        7.15.9

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற	
  கொடிறன் கோட்புலி சென்னி	
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி	
  நம்பியை நாளும் மறவாச்	
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்	
  திருவா ரூரன் உரைத்த	
பாடீராகிலும் பாடுமின் றொண்டீர்	
  பாடநும் பாவம்பற் றறுமே.	        7.15.10

	    - திருச்சிற்றம்பலம் -
 • இத்தலம் சோழ நாட்டிலுள்ளது; இஃது காவிரி தென்கரையில் உள்ள 118வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - கரிநாதேசுவரர்; தேவியார் - மலர்மங்கையம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page