7.12 திருநாட்டுத்தொகை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 12வது திருப்பதிகம்)


7.12 திருநாட்டுத்தொகை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்	7.12.1
கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர்	
தாழையூர் தகடூர் தக்களூர் தருமபுரம்	
வாழை காய்க் கும்வளர் மருகல் நாட்டு மருகலே.	
	
அண்டத் தண்டத்தின் அப்புறத் தாடும் அமுதனூர்	7.12.2
தண்டந் தோட்டந் தண்டங்குறை தண்டலை யாலங்காடு	
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் பாலை கடற்கரை	
கொண்டல் நாட்டுக்கொண்டல் குறுக்கை நாட்டுக் குறுக்கையே.	
	
மூல னூர்முத லாயமுக் கண்ணன் முதலன்ஊர்	7.12.3
நால னூர்நரை ஏறுகந் தேறிய நம்பன்ஊர்	
கோல நீற்றன் குற்றாலங் குரங்கணின் முட்டமும்	
வேலனூர் வெற்றியூர் வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே.	
	
தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் சிராப்பள்ளி	7.12.4
பாங்கூர் எங்கள் பிரான்உறை யுங்கடம் பந்துறை	
பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி பயிலும்ஊர்	
நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர் நாட்டு நறையூரே.	
	
குழலை வென்ற மொழிமட வாளையோர் கூறனாம்	7.12.5
மழலை ஏற்று மணாளன் இடந்தட மால்வரைக்	
கிழவன் கீழை வழிப்பழை யாறு கிழையமும்	
மிழலை நாட்டு மிழலைவெண்ணி நாட்டு மிழலையே.	
	
தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர்	7.12.6
பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம்	
என்னூர் எங்கள் பிரான்உறை யுந்திருத் தேவனூர்	
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசைநாட்டுப் புரிசையே.	
	
ஈழ நாட்டுமா தோட்டம் தென்னாட் டிராமேச்சுரம்	7.12.7
சோழ நாட்டுத் துருத்திநெய்த் தானந் திருமலை	
ஆழி யூரன நாட்டுக்கெல் லாம்அணி யாகிய	
கீழை யில்லர னார்க்கிடங் கிள்ளி குடியதே.	
	
நாளும் நன்னிலம் தென்பனை யூர்வட கஞ்சனூர்	7.12.8
நீள நீள்சடை யான்நெல்லிக் காவும் நெடுங்களம்	
காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்	
வேளார் நாட்டு வேளூர் விளத்தூர் நாட்டு விளத்தூரே.	
	
தழலும் மேனியன் தையலோர் பாகம் அமர்ந்தவன்	7.12.9
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை	
கழலுங் கோவை உடையவன் காதலிக் கும்மிடம்	
பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சைதஞ் சாக்கையே.	
	
மைகொள் கண்டன்எண் டோளன்முக் கண்ணன் வலஞ்சுழி	7.12.10
பைகொள் வாள்அர வாட்டித் திரியும் பரமனூர்	
செய்யில் வாளைகள் பாய்ந்துக ளுந்திருப் புன்கூர்நன்	
றையன் மேய பொழிலணி ஆவடு துறையதே.	
	
பேணி நாடத னில்திரி யும்பெரு மான்றனை	7.12.11
ஆணை யாவடி யார்கள் தொழப்படும் ஆதியை	
நாணி ஊரன் வனப்பகை அப்பன்வன் றொண்டன்சொல்	
பாணி யால்இவை ஏத்துவார் சேர்பர லோகமே.	
	
திருச்சிற்றம்பலம் 


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page