சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பூவணம் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 11வது திருப்பதிகம்)


7.11 திருப்பூவணம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

திருவுடை யார்திரு மால்அய னாலும்	
உருவுடை யார்உமை யாளைஓர் பாகம்	
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்	
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.	7.11.1
	
எண்ணி இருந்து கிடந்து நடந்தும்	
அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்	
பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்	
புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ.	7.11.2
	
தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு	
நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர்	
புள்ளுவ ராகும்அ வர்க்கவர் தாமும்	
புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ.	7.11.3
	
நிலனுடை மான்மறி கையது தெய்வக்	
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில்	
அனலுடை யார்அழ கார்தரு சென்னிப்	
புனலுடை யார்உறை பூவணம் ஈதோ.	7.11.4
	
நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்	
கடைகடை தோறிடு மின்பலி என்பார்	
துடியிடை நன்மட வாளடு மார்பில்	
பொடியணி வார்உறை பூவணம் ஈதோ.	7.11.5
	
மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவொர்	
தன்னமர் பாகம தாகிய சங்கரன்	
முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய	
பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ.	7.11.6
	
மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட	
நக்கிறை யேவிர லாலிற வூன்றி	
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்	
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ.	7.11.7
	
சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம்	
ஆரவி ருப்பிட மாஉறை வான்றனை	
ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை	
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.	7.11.10
	
இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.	

திருச்சிற்றம்பலம் 

  • இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page