சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருவாரூர் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 8வது திருப்பதிகம்)


7.08 திருவாரூர்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

இறைகளோ டிசைந்த இன்பம்	
  இன்பத்தோ டிசைந்த வாழ்வு	
பறைகிழித் தனைய போர்வை	
  பற்றியான் நோக்கி னேற்குத்	
திறைகொணர்ந் தீண்டித் தேவர்	
  செம்பொனும் மணியும் தூவி	
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்	
  அப்பனே அஞ்சி னேனே.	7.08.1
	
ஊன்மிசை உதிரக் குப்பை	
  ஒருபொருள் இலாத மாயம்	
மான்மறித் தனைய நோக்க	
  மடந்தைமார் மதிக்கு மிந்த	
மானுடப் பிறவி வாழ்வு	
  வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்	
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்	
  அப்பனே அஞ்சி னேனே.	7.08.2
	
அறுபதும் பத்தும் எட்டும்	
  ஆறினோ டஞ்சு நான்கும்	
துறுபறித் தனைய நோக்கிச்	
  சொல்லிற்றொன் றாகச் சொல்லார்	
நறுமலர்ப் பூவும் நீரும்	
  நாடொறும் வணங்கு வார்க்கு	
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்	
  அப்பனே அஞ்சி னேனே.	7.08.3
	
சொல்லிடில் எல்லை இல்லை	
  சுவையிலாப் பேதை வாழ்வு	
நல்லதோர் கூரை புக்கு	
  நலமிக அறிந்தே னல்லேன்	
மல்லிகை மாடம் நீடு	
  மருங்கொடு நெருங்கி எங்கும்	
அல்லிவண் டியங்கும் ஆரூர்	
  அப்பனே அஞ்சி னேனே.	7.08.4
	
நரம்பினோ டெலும்பு கட்டி	
  நசையினோ டிசைவொன் றில்லாக்	
குரம்பைவாய்க் குடியி ருந்து	
  குலத்தினால் வாழ மாட்டேன்	
விரும்பிய கமழும் புன்னை	
  மாதவித் தொகுதி என்றும்	
அரும்புவாய் மலரும் ஆரூர்	
  அப்பனே அஞ்சி னேனே.	7.08.5
	
மணம்என மகிழ்வர் முன்னே	
  மக்கள்தாய் தந்தை சுற்றம்	
பிணம்எனச் சுடுவர் பேர்த்தே	
  பிறவியை வேண்டேன் நாயேன்	
பணையிடைச் சோலை தோறும்	
  பைம்பொழில் விளாகத் தெங்கள்	
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்	
  அப்பனே அஞ்சி னேனே.	7.08.6
	
தாழ்வெனுந் தன்மை விட்டுத்	
   தனத்தையே மனத்தில் வைத்து	
வாழ்வதே கருதித் தொண்டர்	
  மறுமைக்கொன் றீய கில்லார்	
ஆழ்குழிப் பட்ட போது	
  வலக்கணில் ஒருவர்க் காவர்	
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்	
  அப்பனே அஞ்சி னேனே.	7.08.7
	
உதிரநீர் இறைச்சிக் குப்பை	
  எடுத்தது மலக்கு கைம்மேல்	
வருவதோர் மாயக் கூரை	
  வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்	
கரியமால் அயனுந் தேடிக்	
  கழலிணை காண மாட்டா	
அரியனாய் நின்ற ஆரூர்	
  அப்பனே அஞ்சி னேனே.	7.08.8
	
பொய்த்தன்மைத் தாய மாயப்	
  போர்வையை மெய்யென் றெண்ணும்	
வித்தகத் தாய வாழ்வு	
  வேண்டிநான் விரும்ப கில்லேன்	
முத்தினைத் தொழுது நாளும்	
  முடிகளால் வணங்கு வார்க்கு	
அத்தன்மைத் தாகும் ஆரூர்	
  அப்பனே அஞ்சி னேனே.	7.08.9
	
தஞ்சொலார் அருள் பயக்குந்	
  தமியனேன் தடமு லைக்கண்	
அஞ்சொலார் பயிலும் ஆரூர்	
  அப்பனை ஊரன் அஞ்சிச்	
செஞ்சொலால் நயந்த பாடல்	
  சிந்தியா ஏத்த வல்லார்	
நஞ்சுலாங் கண்டத் தெங்கள்	
  நாதனை நணுகு வாரே.	7.08.10

திருச்சிற்றம்பலம் 

 • இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page