சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருஎதிர்கொள்பாடி தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 7வது திருப்பதிகம்)


இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

7.07 திருஎதிர்கொள்பாடி

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

மத்த யானை ஏறி மன்னர்	
  சூழவரு வீர்காள்	
செத்த போதில் ஆரும் இல்லை	
  சிந்தையுள் வைம்மின்கள்	
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா	
  வம்மின் மனத்தீரே	
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி	7.7.1
  என்ப தடைவோமே.	
	
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு	
  துயரம் மனைவாழ்க்கை	
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு	
  நெஞ்ச மனத்தீரே	
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்	
  நிறைபுனல் நீள்சடைமேல்	
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி	7.7.2
  என்ப தடைவோமே.	
	
செடிகொ ளாக்கை சென்று சென்று	
  தேய்ந்தொல்லைவீழாமுன்	
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்	
  பட்டு மயங்காதே	
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்	
  கோவண ஆடையுடை	
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி	7.7.3
  என்ப தடைவோமே.	
	
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்	
  வஞ்ச மனத்தீரே	
யாவ ராலும் இகழப் பட்டிங்	
  கல்ல லில்வீழாதே	
மூவ ராயும் இருவ ராயும்	
  முதல்வன் அவனேயாம்	
தேவர் கோயில் எதிர்கொள் பாடி	7.7.4
  என்ப தடைவோமே.	
	
அரித்து நம்மேல் ஐவர் வந்திங்	
  காறலைப் பான்பொருட்டால்	
சிரித்த பல்வாய் வெண்ட லைபோய்	
  ஊர்ப்பு றஞ்சேராமுன்	
வரிக்கொ டுத்திவ் வாள்அ ரக்கர்	
  வஞ்ச மதில்மூன்றும்	
எரித்த வில்லி எதிர்கொள் பாடி	7.7.5
  என்ப தடைவோமே.	
	
பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர்	
  பொத்தடைப் பான்பொருட்டால்	
மையல் கொண்டீர் எம்மோ டாடி	
  நீரும் மனத்தீரே	
நைய வேண்டா இம்மை யேத்த	
  அம்மை நமக்கருளும்	
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி	7.7.6
  என்ப தடைவோமே.	
	
கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச்	
  செற்ற மனம்நீக்கி	
வாசம் மல்கு குழலி னார்கள்	
  வஞ்ச மனைவாழ்க்கை	
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி	
  என்பணிந் தேறேறும்	
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி	7.7.7
  என்ப தடைவோமே.	
	
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு	
  ஏழை மனைவாழ்க்கை	
முன்பு சொன்ன மோழை மையான்	
  முட்டை மனத்தீரே	
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை	
  அடிக ளடிசேரார்	
என்பர் கோயில் எதிர்கொள் பாடி	7.7.8
  என்ப தடைவோமே.	
	
தந்தை யாரும் தவ்வை யாரும்	
  எட்டனைச் சார்வாகார்	
வந்து நம்மோ டுள்ள ளாவி	
  வான நெறிகாட்டும்	
சிந்தை யீரே நெஞ்சி னீரே	
  திகழ்மதி யஞ்சூடும்	
எந்தை கோயில் எதிர்கொள் பாடி	7.7.9
  என்ப தடைவோமே.	
	
குருதி சோர ஆனை யின்தோல்	
  கொண்ட குழற்சடையன்	
மருது கீறி ஊடு போன	
  மாலய னுமறியாச்	
சுருதி யார்க்குஞ் சொல்ல ஒண்ணாச்	
  சோதியெம் ஆதியான்	
கருது கோயில் எதிர்கொள் பாடி	7.7.10
  என்ப தடைவோமே.	
	
முத்து நீற்றுப் பவள மேனிச்	
  செஞ்சடை யான்உறையும்	
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்	
  பரமனை யேபணியச்	
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்	
  சடைய னவன்சிறுவன்	
பத்தன் ஊரன் பாடல்வல்லார்	
  பாதம் பணிவாரே.	7.7.11

திருச்சிற்றம்பலம் 

 • இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - அயிராவதேசுவரர்,
  தேவியார் - வாசமலர்க்குழன்மாதம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page