சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருஅஞ்சைக்களம் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 4வது திருப்பதிகம்)


7.04 திருஅஞ்சைக்களம்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே	
  சடைமேற் கங்கைவெள்ளம் தரித்த தென்னே	
அலைக்கும் புலித்தோல் கொண்டசைத்த தென்னே	
  அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே	
மலைக்குந் நிகரொப் பனவன் திரைகள்	
  வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்	
டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.	7.04.1
	
பிடித்தாட்டி ஓர்நாகத் தைப்பூண்ட தென்னே	
  பிறங்குஞ் சடைமேற் பிறைசூடிற் றென்னே	
பொடித்தான் கொண்டுமெய்ம் முற்றும்பூசிற் றென்னே	
  புகரே றுகந்தேறல் புரிந்த தென்னே	
மடித்தோட் டந்துவன் றிரைஎற் றியிட	
  வளர்சங்கம் அங்காந்து முத்தஞ் சொரிய	
அடித்தார் கடலங் கரைமேல் மகோதை	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.	7.04.2
	
சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே	
  சிறியார் பெரியார் மனத்தேறல் உற்றால்	
முந்தித் தொழுவார் இறவார் பிறவார்	
  முனிகள் முனியே அமரர்க் கமரா	
சந்தித் தடமால் வரைபோல் திரைகள்	
  தணியா திடறுங் கடலங் கரைமேல்	
அந்தித் தலைச்செக்கர் வானே ஒத்தியால்	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.	7.04.3
	
இழைக்கு மெழுத்துக் குயிரே ஒத்தியால்	
  இலையே ஒத்தியால் உனையே ஒத்தியால்	
குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால்	
  அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால்	
மழைக்குந் நிகர்ஒப் பனவன் திரைகள்	
  வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்	
டழைக்குங் கடலங் கரைமேல் மகோதை	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.	7.04.4
	
வீடின் பயனென் பிறப்பின் பயனென்	
  விடையே றுவதென் மதயா னைநிற்கக்	
கூடும் மலைமங் கைஒருத் தியுடன்	
  சடைமேற் கங்கையாளை நீசூடிற் றென்னே	
பாடும் புலவர்க் கருளும் பொருளென்	
  நிதியம் பலசெய் தகலச் செலவில்	
ஆடுங் கடலங் கரைமேல் மகோதை	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.	7.04.5
	
இரவத் திடுகாட் டெரியாடிற் றென்னே	
  இறந்தார் தலையிற் பலிகோடல் என்னே	
பரவித் தொழுவார் பெறுபண்டம் என்னே	
  பரமா பரமேட் டிபணித் தருளாய்	
உரவத் தொடுசங்க மோடிப்பி முத்தம்	
  கொணர்ந்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்	
டரவக் கடலங் கரைமேல் மகோதை	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.	7.04.6
	
ஆக்கும் மழிவும் ஐயநீ என்பன்நான்	
  சொல்லுவார் சொற்பொரு ளவைநீ என்பன்நான்	
நாக்கும் செவியுங் கண்ணும்நீ என்பன்நான்	
  நலனே இனிநான் உனைநன் குணர்ந்தேன்	
நோக்கும் நிதியம் பலஎத் தனையும்	
  கலத்திற் புகப்பெய்து கொண்டேற நுந்தி	
ஆர்க்குங் கடலங் கரைமேல் மகோதை	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.	7.04.7
	
வெறுத்தேன் மனைவாழ்க் கையைவிட் டொழிந்தேன்	
  விளங்குங் குழைக்கா துடைவே தியனே	
இறுத்தாய் இலங்கைக் கிறையா யவனைத்	
  தலைபத் தொடுதோள் பலஇற் றுவிழக்	
கறுத்தாய் கடல்நஞ் சமுதுண்டு கண்டங்	
  கடுகப் பிரமன் தலையைந் திலும்ஒன்	
றறுத்தாய் கடலங் கரைமேல் மகோதை	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.	7.04.8
	
பிடிக்குக் களிறே ஒத்தியால் எம்பிரான்	
  பிரமற் கும்பிரான் மற்றைமாற் கும்பிரான்	
நொடிக்கும் அளவிற் புரமூன் றெரியச்	
  சிலைதொட் டவனே உனைநான் மறவேன்	
வடிக்கின் றனபோற் சிலவன் திரைகள்	
  வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண்	
டடிக்குங் கடலங் கரைமேல் மகோதை	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.	7.04.9
	
எந்தம் அடிகள் இமையோர் பெருமான்	
  எனக்கென் றும்அளிக் கும்மணி மிடற்றன்	
அந்தண் கடலங் கரைமேல் மகோதை	
  அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனை	
மந்தம் முழவுங் குழலும் மியம்பும்	
  வளர்நா வலர்கோன் நம்பியூ ரன்சொன்ன	
சந்தம் மிகுதண் தமிழ்மாலை கள்கொண்	
  டடிவீ ழவல்லார் தடுமாற் றிலரே.	7.04.10

திருச்சிற்றம்பலம் 

 • இத்தலம் மலைநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - அஞ்சைக்களத்தீசுவரர், தேவியார் - உமையம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page