சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருநெல்வாயில் அரத்துறை தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 3வது திருப்பதிகம்)


7.03 திருநெல்வாயில் அரத்துறை

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

கல்வாய்அகி லுங்கதிர் மாமணியும்	7.03.1
    கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல்	
நெல்வாயில் அரத்துறை நீடுறையும்	
    நிலவெண்மதி சூடிய நின்மலனே	
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்	
    நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்	
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்	
    தொடர்ந்தேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.	
	
கறிமாமிள கும்மிகு வன்மரமும்	7.03.2
    மிகவுந் திவருந்நிவ வின்கரைமேல்	
நெறிவார்குழ லாரவர் காணநடஞ்செய்	
   நெல்வாயில் அரத்துறை நின்மலனே	
வறிதேநிலை யாதஇம் மண்ணுலகில்	
    நரனாக வகுத்தனை நானிலையேன்	
பொறிவாயில்இவ் வைந்தினை யும்மவியப்	
   பொருதுன்னடி யேபுகுஞ் சூழல்சொல்லே.	
	
புற்றாடர வம்மரை ஆர்த்துகந்தாய்	7.03.3
    புனிதாபொரு வெள்விடையூர் தியினாய்	
எற்றேஒரு கண்ணிலன் நின்னையல்லால்	
    நெல்வாயில் அரத்துறை நின்மலனே	
மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான்	
    வண்டார்குழ லாள்மங்கை பங்கினனே	
அற்றார் பிறவிக்கடல் நீந்திஏறி	
    அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.	
	
கோடுயர் கோங்கலர் வேங்கையலர்	7.03.4
    மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்	
நீடுயர் சோலைநெல் வாயில்அரத்	
    துறைநின்மல னேநினை வார்மனத்தாய்	
ஓடு புனற்கரை யாம்இளமை	
    உறங்கிவிழித் தாலொக்கும் இப்பிறவி	
வாடி இருந்து வருந்தல் செய்யா	
    தடியேனுய்யப் போவதோர் சூழல்சொல்லே.	
	
உலவும்முகி லிற்றலை கற்பொழிய	7.03.5
    உயர்வேயொ டிழிநிவ வின்கரைமேல்	
நிலவும்மயி லாரவர் தாம்பயிலும்	
    நெல்வா யிலரத்துறை நின்மலனே	
புலன்ஐந்தும் மயங்கி அகங்குழையப்	
    பொருவேலொர் நமன்றமர் தாம்நலிய	
அலமந்து மயங்கி அயர்வ தன்முன்	
    அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.	
	
ஏலம்மில வங்கம் எழிற்கனகம்	7.03.6
    மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்	
நீலம்மலர்ப் பொய்கையில் அன்னம்மலி	
    நெல்வாயில் அரத்துறையாய் ஒருநெல்	
வாலூன்ற வருந்தும் உடம்பிதனை	
    மகிழாதழ காஅலந் தேன்இனியான்	
ஆலந்நிழ லில்அமர்ந் தாய்அமரா	
     அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.	
	
சிகரம்முகத் தில்திர ளார்அகிலும்	7.03.7
   மிகஉந்தி வருந்நிவ வின்கரைமேல்	
நிகரில்மயி லாரவர் தாம்பயிலுந்	
   நெல்வாயில் அரத்துறை நின்மலனே	
மகரக்குழை யாய்மணக் கோலமதே	
   பிணக்கோலம தாம்பிற விஇதுதான்	
அகரம்முத லின்எழுத் தாகிநின்றாய்	
    அடியேன் உய்யப் போவதோர் சூழல்சொல்லே.	
	
திண்டேர்நெடு வீதிஇ லங்கையர்கோன்	7.03.8
    திரள்தோள்இருபஃதும் நெரித்தருளி	
ஞெண்டாடு நெடுவயல் சூழ்புறவின்	
    நெல்வாயில் அரத்துறை நின்மலனே	
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்	
    பரஞ்சோதி நின்நாமம் பயிலப்பெற்றேன்	
அண்டாவம ரர்க்கம ரர்பெருமான்	
   அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.	
	
மாணாஉரு வாகியொர் மண்ணளந்தான்	7.03.9
    மலர்மேலவன் நேடியும் காண்பரியாய்	
நீணீள்முடி வானவர் வந்திறைஞ்சும்	
    நெல்வாயில் அரத்துறை நின்மலனே	
வாணார்நுத லார்வலைப் பட்டடியேன்	
    பலவின்கனி வீந்தது போல்வதன்முன்	
ஆணோடுபெண் ணாம்உரு வாகிநின்றாய்	
    அடியேன்உய்யப் போவதோர் சூழல்சொல்லே.	
	
நீரூரும் நெடுவயல் சூழ்புறவின்	7.03.10
    நெல்வாயில் அரத்துறை நின்மலனைத்	
தேரூர்நெடு வீதிநன் மாடமலி	
   தென்னாவலர் கோன்அடித்தொண்டன் அணி	
ஆரூரன்உரைத்தன நற்றமிழின்	
    மிகுமாலையொர் பத்திவை கற்றுவல்லார்	
காரூர்களி வண்டறை யானைமன்ன	
   ரவராகியொர் விண்முழு தாள்பவரே.	

திருச்சிற்றம்பலம் 

 • இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - அரத்துறைநாதர், தேவியார் - ஆனந்தநாயகியம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page