சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
திருவெண்ணெய்நல்லூர் தேவாரத் திருப்பதிகம்

(ஏழாம் திருமுறை 1வது திருப்பதிகம்)


7.01 திருவெண்ணெய்நல்லூர்

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 
பித்தாபிறை சூடீபெரு 	
  மானே அருளாளா	
எத்தான்மற வாதேநினைக் 	
  கின்றேன்மனத் துன்னை	
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் 	
  நல்லூர் அருட்டுறையுள்	
அத்தாஉனக் காளாயினி 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.01
		
நாயேன்பல நாளும்நினைப்	
  பின்றிமனத் துன்னைப்	
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற	
  லாகாவருள் பெற்றேன்	
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்	
  நல்லூர் அருட்டுறையுள்	
ஆயாஉனக் காளாயினி 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.02
		
மன்னேமற வாதேநினைக்	
  கின்றேன்மனத் துன்னைப்	
பொன்னேமணி தானேவயி	
  ரம்மேபொரு துந்தி	
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்	
  நல்லூர் அருட்டுறையுள்	
அன்னேஉனக் காளாயினி 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.03
		
முடியேன்இனிப் பிறவேன்பெறின்	
  மூவேன்பெற்றம் ஊர்தீ	
கொடியேன்பல பொய்யேஉரைப்	
  பேனைக்குறிக் கொள்நீ	
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்	
  நல்லூர் அருட்டுறையுள்	
அடிகேளுனக் காளாயினி 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.04
		
பாதம்பணி வார்கள்பெறும்	
  பண்டம்மது பணியாய்	
ஆதன்பொருள் ஆனேன்அறி	
  வில்லேன் அருளாளா	
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்	
  நல்லூர் அருட்டுறையுள்	
ஆதீஉனக் காளாயினி 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.05
		
தண்ணார்மதி சூடீதழல்	
  போலும்திரு மேனீ	
எண்ணார்புரம் மூன்றும்எரி	
  உண்ணநகை செய்தாய்	
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 	
  நல்லூர் அருட்டுறையுள்	
அண்ணாஉனக் காளாயினி 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.06
		
ஊனாய்உயிர் ஆனாய்உடல்	
  ஆனாய்உல கானாய்	
வானாய்நிலன் ஆனாய்கடல்	
  ஆனாய்மலை ஆனாய்	
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்	
  நல்லூர் அருட்டுறையுள்	
ஆனாய்உனக் காளாயினி 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.07
		
ஏற்றார்புரம் மூன்றும்எரி	
  உண்ணச்சிலை தொட்டாய்	
தேற்றாதன சொல்லித்திரி	
  வேனோசெக்கர் வானீர்	
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்	
  நல்லூர் அருட்டுறையுள்	
ஆற்றாயுனக் காளாயினி 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.08
		
மழுவாள்வலன் ஏந்தீமறை	
  ஓதீமங்கை பங்கா	
தொழுவார்அவர் துயர்ஆயின	
  தீர்த்தல்உன தொழிலே	
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்	
  நல்லூர் அருட்டுறையுள்	
அழகாஉனக் காளாயினி 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.09
		
காரூர்புனல் எய்திக்கரை	
  கல்லித்திரைக் கையால்	
பாரூர்புகழ் எய்தித்திகழ்	
  பன்மாமணி உந்திச்	
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்	
  நல்லூர் அருட்டுறையுள்	
ஆரூரன்எம் பெருமாற்காள் 	
  அல்லேன்எனல் ஆமே.		    7.1.10

	    - திருச்சிற்றம்பலம் -
 • இத்தலம் நடுநாட்டிலுள்ளது; இஃது நடுநாட்டில் உள்ள 14வது பாடல் பெற்ற தலமாகும். சுவாமி பெயர் - தடுத்தாட்கொண்டவீசுவரர்; தேவியார் - வேற்கண்மங்கையம்மை.


Back to Complete Seventh thirumuRai Index

Back to sundharar thEvaram Page
Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page