6.86 திருவாலம்பொழில் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

852

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்
கமலத்தோன் றலையரிந்த கபா லியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.1
853

உரித்தானைக் களிறதன் றோல் போர்வை யாக
உடையானை உடைபுலியி னதளே யாகத்
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்
பாம்பணையான் றனக்கன்றங் காழி நல்கிச்
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.2
854

உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளாற்
கருவீன்ற வெங்களவை யறிவான் றன்னைக்
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை
அள்ளூறி எம்பெருமா னென்பார்க் கென்றுந்
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.3
855

பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் றன்னை
வாட்போக்கி யம்மானை எம்மா னென்று
வாரமதா மடியார்க்கு வார மாகி
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.4
856

வரையார்ந்த மடமங்கை பங்கன் றன்னை
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் றன்னைப்
பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.5
857

விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் றன்னை
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்
பாழ்படுப்பான் சிலைமலைநா ணேற்றி யம்பு
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச்சிந்தி நெஞ்சே.

6.86.6
858

பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்
புறம்புறமே சோதித்த புனிதன் றன்னை
எல்லாருந் தன்னையே இகழ அந்நாள்
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் றன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.7
859

ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ
டயன்தேடி நாடரிய அம்மான் றன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் றன்னைப்
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்
சிந்தியவெந் தீவினைகள் தீர்ப்பான் றன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.8
860

கையிலுண் டுழல்வாருஞ் சாக்கி யருங்
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்
பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

6.86.9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

6.86.1

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஆத்மநாதீசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page