6.83 திருப்பாசூர் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

823

விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.1
824

வேதமோர் நான்காயா றங்க மாகி
விரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்
கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக்
குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக்
காதலால் வானவர்கள் போற்றி யென்று
கடிமலர்க ளவைதூவி ஏத்த நின்ற
பாதியோர் மாதினனைப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.2
825

தடவரைக ளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்
காண்கின்ற கதிரவனும் மதியு மாகிக்
குடமுழவச் சதிவழியே அனல்கை யேந்திக்
கூத்தாட வல்ல குழக னாகிப்
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.3
826

நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை
நிறைமதிய முடன்சூடி நீதி யாலே
சீராரும் மறையோதி உலக முய்யச்
செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட
காராருங் கண்டனைக் கச்சி மேய
கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.4
827

வேடனாய் விசயன்றன் வியப்பைக் காண்பான்
விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்
கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்
கொலைப்பகழி யுடன்கோத்துக் கோரப் பூசல்
ஆடினார் பெருங்கூத்துக் காளி காண
அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு
பாடினார் நால்வேதம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.5
828

புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலாற்
பொதுப்பந்தர் அதுவிழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்
சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு
விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.6
829

இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்
இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்
அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்
அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்
தணல்முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்
தத்துவனைச் சாந்தகிலி னளறு தோய்ந்த
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.7
830

அண்டவர்கள் கடல்கடைய அதனுட் டோ ன்றி
அதிர்ந்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்டிசையுஞ் சுடுகின்ற ஆற்றைக் கண்டும்
இமைப்பளவில் உண்டிருண்ட கண்டர் தொண்டர்
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று
வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்
பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.8
831

ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை
நான்முகனு மறியாத நெறியான் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.9
832

வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்
மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோ டிச்
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்
தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி
ஏந்துதிரள் திண்டோ ளுந் தலைகள் பத்தும்
இறுத்தவன்றன் இசைகேட்டு விரக்கங் கொண்ட
பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

6.83.1

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page