6.80 திருமாற்பேறு - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

795

பாரானைப் பாரினது பயனா னானைப்
படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னை
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்
கனைத்துலகு மானானை அமரர் கோனைக்
காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்
கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.1
796

விளைக்கின்ற நீராகி வித்து மாகி
விண்ணோடு மண்ணாகி விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்
தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்
முளைக்கின்ற கதிர்மதியு மரவு மொன்றி
முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்
திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.2
797

மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை
மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்
கலைநிலவு கையானைக் கம்பன் றன்னைக்
காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை
மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்
சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.3
798

உற்றானை உடல்தனக்கோர் உயிரா னானை
ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்
பெரியனவும் அரியனவு மெல்லாம் முன்னே
கற்றானைக் கற்பனவுந் தானே யாய
கச்சியே கம்பனைக் காலன் வீழச்
செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.4
799

நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்
குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த
அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.5
800

மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை
மறப்பிலியை மதியேந்து சடையான் றன்னை
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை
உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்
கருநிலவு கண்டனைக் காளத் தியைக்
கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச்
செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.6
801

பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்
பெரியானை அரியானைப் பெண்ணா ணாய
நிறத்தானை நின்மலனை நினையா தாரை
நினையானை நினைவோரை நினைவோன் றன்னை
அறத்தானை அறவோனை ஐயன் றன்னை
அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்
திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.7
802

வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை
வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை
ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்
கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்
கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்
தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.8
803

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை
முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்
பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைப்
பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்
ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்
செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.9
804

விரித்தானை நான்மறையோ டங்க மாறும்
வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான் றன்னை
நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்
தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

6.80.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page