6.79 திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

785

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
ஆதிரைநா ளாதரித்த அம்மான் றன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.1
786

அக்கிருந்த அரையானை அம்மான் றன்னை
அவுணர்புர மொருநொடியி லெரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் றன்னைக்
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் றன்னைப்
புண்ணியனை எண்ணருஞ்சீர்ப் போக மெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.2
787

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் றன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
இடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.3
788

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.4
789

கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் றன்னைக்
காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் றன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் றன்னைப்
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.5
790

விடந்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலக மாள்விப் பானை
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.6
791

விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
முன்னானைப் பின்னானை அந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் றன்னை
உமையிருந்த பாகத்து ளொருவன் றன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் றன்னை
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.7
792

கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவே லேந்தி னானை
என்னானைத் தென்னானைக் காவான் றன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.8
793

பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்
படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் றன்னைக்
காரணனை நாரணனைக் கமலத் தோனை
எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டரனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.9
794

கைத்தலங்கள் இருபதுடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாம
தத்துவனைத் தலையாலங் காடன் றன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

6.79.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆடவல்லவீசுவரர், தேவியார் - திருமடந்தையம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page