6.69 திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

691

ஆராத இன்னமுதை அம்மான் றன்னை
அயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.1
692

விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.2
693

பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்
புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை
வேதியனை வெண்காடு மேயான் றன்னை
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.3
694

போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்
பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்
சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.4
695

அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்
கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.5
696

கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்
கனலாடு திருமேனி கமலத் தோன்றன்
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.6
697

நதியாருஞ் சடையானை நல்லூ ரானை
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை
மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை
நிதியாளன் றோழனை நீடு ரானை
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.7
698

நற்றவனை நான்மறைக ளாயி னானை
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்
திருவாரூர்த் திருமூலத் தான மேய
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக்
குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.8
699

ஊனவனை உடலவனை உயிரா னானை
உலகேழு மானானை உம்பர் கோவை
வானவனை மதிசூடும் வளவி யானை
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக் கயிலாய மலையு ளானைக்
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.9
700

தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித்
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்
குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

6.69.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - முக்கோணவீசுவரர், தேவியார் - மைமேவுங்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page