6.66 திருநாகேச்சரம் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

இசை கேட்க:-

Get the Flash Player to see this player.

திருச்சிற்றம்பலம்

661

தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்
தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.1
662

உரித்தானை மதவேழந் தன்னை மின்னார்
ஒளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந்
தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத்
தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம்
அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க்
கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந்
தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.2
663

காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்
காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்தம் மனத்து ளனை
மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத
ஏரானை இமையவர்தம் பெருமான் றன்னை
இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க
சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.3
664

தலையானை எவ்வுலகுந் தானா னானைத்
தன்னுருவம் யாவர்க்கு மறிய வொண்ணா
நிலையானை நேசர்க்கு நேசன் றன்னை
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
மலையானை வரியரவு நாணாக் கோத்து
வல்லசுரர் புரமூன்று மடிய வெய்த
சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.4
665

மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு
விரும்பாத அரும்பாவி யவர்கட் கென்றும்
பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்
பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்
பையானைப் பையரவ மசைத்தான் றன்னைப்
பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்
செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.5
666

துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்
தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த
நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி
நிற்பனவும் நடப்பனவு மாயி னானை
மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை
அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ்
சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.6
667

மறையானை மால்விடையொன் றூர்தி யானை
மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள்
இறையானை என்பிறவித் துயர்தீர்ப் பானை
இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில்
உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம்
என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த
சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.7
668

எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்
இருவிசும்பில் வருபுனலைத் திருவார் சென்னிப்
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப்
பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்
கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்
குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.8
669

அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
கெளியானை யாவர்க்கு மரியான் றன்னை
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறற்
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.9
670

சீர்த்தானை உலகேழுஞ் சிறந்து போற்றச்
சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் றன்னைப்
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்
பனிமதியஞ் சடையானைப் புனிதன் றன்னை
ஆர்த்தோடி மலையெடுத்த அரக்க னஞ்ச
அருவிரலா லடர்த்தானை அடைந்தோர் பாவந்
தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே.

6.66.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page