6.64 திருவேகம்பம் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

640

கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.1
641

பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.2
642

நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்
துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்
பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.3
643

தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்
வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.4
644

அடுத்தானை யுரித்தான் காண் ... ...
... ... ... ...

இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று.

6.64.5
645

அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.6
646

அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும்
பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்
கடலில்விட முண்டமரர்க் கமுத மீய
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.7
647

முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.8
648

வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு
வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமு மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண்
பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.9
649

வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண்
விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.10
650

அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்
திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

6.64.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page