6.62 திருவானைக்கா - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

620

எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.1
621

ஊனாகி உயிராகி யதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே யென்னுள் வந்து
நல்லனவுந் தீயனவுங் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றி யூராய்
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாயுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.2
622

ஒப்பாயிவ் வுலகத்தோ டொட்டி வாழ்வான்
ஒன்றலாத் தவத்தாரோ டுடனே நின்று
துப்பாருங் குறையடிசில் துற்றி நற்றுன்
திறமறந்து திரிவேனைக் காத்து நீவந்
தெப்பாலும் நுண்ணுணர்வே யாக்கி யென்னை
ஆண்டவனே எழிலானைக் காவா வானோர்
அப்பாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.3
623

நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
நிறைமதியஞ் சடைவைத்தாய் அடையா துன்பால்
முனைத்தவர்கள் புரமூன்று மெரியச் செற்றாய்
முன்னானைத் தோல்போர்த்த முதல்வா வென்றுங்
கனைத்துவரும் எருதேறுங் காள கண்டா
கயிலாய மலையாநின் கழலே சேர்ந்தேன்
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக் காவா
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.4
624

இம்மாயப் பிறப்பென்னுங் கடலாந் துன்பத்
திடைச்சுழிப்பட் டிளைப்பேனை இளையா வண்ணங்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
காதலரு ளவைவைத்தாய் காண நில்லாய்
வெம்மான மதகரியி னுரிவை போர்த்த
வேதியனே தென்னானைக் காவுள் மேய
அம்மான்நின் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.5
625

உரையாரும் புகழானே ஒற்றி யூராய்
கச்சியே கம்பனே காரோ ணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்த மல்கு
திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.6
626

மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
மான்மறியு மாமழுவும் அனலு மேந்துங்
கையானே காலனுடல் மாளச் செற்ற
கங்காளா முன்கோளும் விளைவு மானாய்
செய்யானே திருமேனி யரியாய் தேவர்
குலக்கொழுந்தே தென்னானைக் காவுள் மேய
ஐயாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.7
627

இலையாருஞ் சூலத்தாய் எண்தோ ளானே
எவ்விடத்தும் நீயலா தில்லை யென்று
தலையாரக் கும்பிடுவார் தன்மை யானே
தழல்மடுத்த மாமேரு கையில் வைத்த
சிலையானே திருவானைக் காவுள் மேய
தீயாடீ சிறுநோயால் நலிவுண் டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.8
628

விண்ணாரும் புனல்பொதிசெஞ் சடையாய் வேத
நெறியானே எறிகடலின் நஞ்ச முண்டாய்
எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான்
என்றென்றே நாவினிலெப் பொழுதும் உன்னிக்
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப் போதுங்
கடிபொழில்சூழ் தென்னானைக் காவுள் மேய
அண்ணாநின் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.9
629

கொடியேயும் வெள்ளேற்றாய் கூளி பாடக்
குறட்பூதங் கூத்தாட நீயு மாடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
மதிலானைக் காவுளாய் மாகா ளத்தாய்
படியேயுங் கடலிலங்கைக் கோமான் றன்னைப்
பருமுடியுந் திரள்தோளு மடர்த்து கந்த
அடியேவந் தடைந்தடிமை யாகப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.

6.62.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page