6.51 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

509

கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்
கந்தமா தனத்துளார் காளத் தியார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபா லமும்
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.1
510

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசர மேவினார் கேதா ரத்தார்
கெடில வடவதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
மழபாடி மேய மழுவா ளனார்
வேதி குடியுளார் மீயச் சூரார்
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.2
511

அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்
அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணாழி கையார் உமையா ளோடும்
இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை
மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.3
512

வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்
பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
உரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டி
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.4
513

புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற்
றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்
கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியர் மல்கு செல்வ
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.5
514

பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார்
இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.6
515

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.7
516

அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொdr சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.8
517

கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்
கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்
தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர்
வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்
வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.9
518

அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்
அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்
புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார்
பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி
எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்
கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.10
519

புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்
தலைகளொடு மலைகளன தாளுந் தோளும்
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்
வீழி மிழலையே மேவி னாரே.

6.51.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page