6.49 திருக்கோகரணம் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

489

சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.1
490

தந்தவத்தன் தந்தலையைத் தாங்கி னான்காண்
சாரணன்காண் சார்ந்தார்க்கின் னமுதா னான்காண்
கெந்தத்தன் காண்கெடில வீரட் டன்காண்
கேடிலிகாண் கெடுப்பார்மற் றில்லா தான்காண்
வெந்தொத்த நீறுமெய் பூசி னான்காண்
வீரன்காண் வியன்கயிலை மேவி னான்காண்
வந்தொத்த நெடுமாற்கும் அறிவொ னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.2
491

தன்னுருவம் யாவருக்குந் தாக்கா தான்காண்
தாழ்சடையெம் பெருமான்காண் தக்கார்க் குள்ள
பொன்னுருவச் சோதிபுன லாடி னான்காண்
புராணன்காண் பூதங்க ளாயி னான்காண்
மின்னுருவ நுண்ணிடையான் பாகத் தான்காண்
வேழத்தி னுரிவெருவப் போர்த்தான் தான்காண்
மன்னுருவாய் மாமறைக ளோதி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.3
492

ஆறேறு செஞ்சடையெம் ஆரூ ரன்காண்
அன்பன்காண் அணிபழனம் மேயான் றான்காண்
நீறேறி நிழல்திகழும் மேனி யான்காண்
நிருபன்காண் நிகரொன்று மில்லா தான்காண்
கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்
மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.4
493

சென்றச் சிலைவாங்கிச் சேர்வித் தான்காண்
தீயம்பன் காண்திரி புரங்கள் மூன்றும்
பொன்றப் பொடியாக நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையாளிகாண்
அன்றப் பொழுதே அருள்செய் தான்காண்
அனலாடி காண்அடியார்க் கமுதா னான்காண்
மன்றல் மணங்கமழும் வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.5
494

பிறையோடு பெண்ணொருபால் வைத்தான் றான்காண்
பேரவன்காண் பிறப்பொன்று மில்லா தான்காண்
கறையோடு மணிமிடற்றுக் காபாலி காண்
கட்டங்கள் காண்கையிற் கபால மேந்திப்
பறையோடு பல்கீதம் பாடி னான்காண்
ஆடினான் காண்பாணி யாக நின்று
மறையோடு மாகீதங் கேட்டான் றான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.6
495

மின்னளந்த மேல்முகட்டின் மேலுற் றான்காண்
விண்ணவர்தம் பெருமான்காண் மேவி லெங்கும்
முன்னள்ந்த மூவர்க்கும் முதலா ளான்காண்
மூவிலைவேற் சூலத்தெங் கோலத் தான்காண்
எண்ணளந்தென் சிந்தையே மேவி னான்காண்
ஏவலன்காண் இமையோர்க் ளேத்த நின்று
மண்ணளந்த மாலறியா மாயத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.7
496

பின்னு சடைமேற்பிறை சூடி னான்காண்
பேரருளன் காண்பிறப்பொன் றில்லா தான்காண்
முன்னி யுலகுக்கு முன்னா னான்காண்
மூவெயிலுஞ் செற்றுகந்த முதல்வன் றான்காண்
இன்னவுரு வென்றறிவொண் ணாதான் றான்காண்
ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்
மன்னும் மடந்தையோர் பாகத் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.8
497

வெட்ட வெடித்தார்க்கோர் வெவ்வழ லன்காண்
வீரன்காண் வீரட்டம் மேவி னான்காண்
பொட்ட அனங்கனையும் நோக்கி னான்காண்
பூதன்காண் பூதப் படையி னான்காண்
கட்டக் கடுவினைகள் காத்தாள் வான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
வட்ட மதிப்பாகஞ் சூடி னான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.9
498

கையாற் கயிலை யெடுத்தான் தன்னைக்
கால்விரலால் தோள்நெரிய வூன்றி னான்காண்
மெய்யின் நரம்பிசையாற் கேட்பித் தாற்கு
மீண்டே யவற்கருள்கள் நல்கி னான்காண்
பொய்யர் மனத்துப் புறம்பா வான்காண்
போர்ப்படையான் காண்பொருவா ரில்லா தான்காண்
மைகொள் மணிமிடற்று வார்சடை யான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.

6.49.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page