6.39 திருமழபாடி - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

391

நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்மரண மட்டான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.1
392

கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.2
393

நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.3
394

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையாற் றிரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.4
395

உலந்தார்தம் அங்க மணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேத மாறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.5
396

தாமரையான் தன்றலையைச் சாய்த்தான் கண்டாய்
தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்
பூமலரா னேத்தும் புனிதன் கண்டாய்
புணர்ச்சிப் பொருளாகி நின்றான் கண்டாய்
ஏமருவு வெஞ்சிலையொன் றேந்தி கண்டாய்
இருளார்ந்த கண்டத் திறைவன் கண்டாய்
மாமருவுங் கலைகையி லேந்தி கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.6
397

நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.7
398

பொன்னியலுந் திருமேனி யுடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.8
399

ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்
காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.9
400

ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய்
ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை
ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் றானே.

6.39.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்,
தேவியார் - அழகாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page