6.28 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

279

நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்
நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங்
காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்
கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங்
கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங்
கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்
ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.1
280

பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
பாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங்
காபாலங் கட்டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்க ளட்டார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.2
281

துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந்
தூய திருமேனிச் செல்வர் போலும்
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும்
மணியுடைய மாநாக மார்ப்பார் போலும்
வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.3
282

ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்
ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்
காட்டகத்தே ஆட லுடையார் போலுங்
காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.4
283

ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்
இமையவர்க ளேத்த இருந்தார் போலுங்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
வானத் திளமதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுந்தாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.5
284

காமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலுஞ்
சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ்
சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும்
நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையுந் திருமுடியார் தாமே போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.6
285

முடியார் மதியரவம் வைத்தார் போலும்
மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலுஞ்
செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
செல்கதி தான்கண்ட சிவனார் போலுங்
கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியார் அடிமை உகப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.7
286

இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலுஞ்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந்
தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.8
287

பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
பிறவி யிறவி இலாதார் போலும்
முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
முழுநீறு பூசு முதல்வர் போலுங்
கண்டத் திறையே கறுத்தார் போலுங்
காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.9
288

ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை அஞ்ச லென்பார்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.10
289

நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்
கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்
கோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலுஞ்
சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்
திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
அணியாரூர்த் திருமூலத் தான னாரே.

6.28.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page