6.27 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

269

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

6.27.1
270

ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க்
கில்லையே னுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி
ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னார்நின்ற அரனைக் காண்பேன்
தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.

6.27.2
271

சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்
செழுங்கணால் நோக்குமிது வூக்க மன்று
பல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூதப்
பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்
சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்
தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்
நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால்
நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.

6.27.3
272

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.

6.27.4
273

துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.

6.27.5
274

பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்றும்
அதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை ஆரூர்ச்
செல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே.

6.27.6
275

இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
அமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.

6.27.7
276

விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரிற்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே.

6.27.8
277

மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச
முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி
நாள்வாயு நும்முடைய மம்ம ராணை
நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்
நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற
நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்
ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால்
ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.

6.27.9
278

சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித்
துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல்
செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்க னாகந்
தளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழுந் தருளியவெம் பெருமான் பாதத்
திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.

6.27.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page