6.26 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

263

பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்
பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை
வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை
வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச்
சோதிச்சந் திரன்மேனி மறுச்செய்தானைச்
சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை
ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.1
264

வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை
ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை
அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை
அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை
அப்புறுத்த நீரகத்தே அழலா னானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.2
265

ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை
ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை
வருகாலஞ் செல்கால மாயி னானை
வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைப்
பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்
புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை
அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.3
266

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை
வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை
ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை
உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்
வைப்பானைக் களைவானை வருவிப் பானை
வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை
அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.4
267

பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்
பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத்
துண்டத்தின் துணிபொருளைச் சுடுதீ யாகிச்
சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக்
கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து
கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை
அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.5
268

நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்
நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப்
பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய்
பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச்
சோதியாய் இருளாகிச் சுவைக ளாகிச்
சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை
ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.

6.26.6

இப்பதிகத்தில் 7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

6.26.7-10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page