6.24 திருவாரூர் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

242

கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்
அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்
எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்
எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்
செம்மானத் தொளியன்ன மேனி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.1
243

ஊனேறு படுதலையில் உண்டி யான்காண்
ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்
ஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண்
அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்
மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்
மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்
தேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.2
244

ஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்
சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் றான்காண்
ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்
அனலாடி காண்அடியார்க் கமிர்தா னான்காண்
தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.3
245

கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்
கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்
எங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண்
ஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண்
பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண்
பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்
செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.4
246

காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்
கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்
போரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண்
புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்
நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்
நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்
சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.5
247

பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்
பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்
கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்
கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்
இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்
இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்
சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.6
248

தலையுருவச் சிரமாலை சூடி னான்காண்
தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்
அலையுருவச் சுடராழி ஆக்கி னான்காண்
அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்
கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்
கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்
சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.7
249

ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்
அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து
கையன்காண் கடற்பூதப் படையி னான்காண்
கண்ணெரியால் ஐங்கணையோ னுடல்காய்ந் தான்காண்
வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்
வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்
செய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.8
250

மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்
மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்
இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்
இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்
கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்
கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்
சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.9
251

பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்
புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்
மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்
மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்
எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்
இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றான்காண்
திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.

6.24.10

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page