6.21 திருவாக்கூர் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

211

முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலுங்
கல்லலகு பாணி பயின்றார் போலுங்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றேவல் தாமகிழ்ந்த குழகர்போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.1
212

ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணரப் படாதொன் றில்லை போலுங்
காதிற்குழை யிலங்கப் பெய்தார் போலுங்
கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.2
213

மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன ஒளியார் போலும்
ஐவா யரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.3
214

வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
பூங்கங்கை தோய்ந்த சடையார் போலுங்
கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலுங்
கட்டங்க மேந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.4
215

ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
இடுவெண் டலைகலனா ஏந்தி நாளும்
மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
மாகாச மாயவெண் ணீருந் தீயும்
மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாச மென்றிவையு மானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.5
216

மாதூரும் வாணெடுங்கண் செவ்வாய் மென்றோள்
மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலு மிறுதியு மில்லார் போலுந்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.6
217

மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
மான்றோ லுடையா மகிழ்ந்தார் போலுங்
கோலானைக் கோளழலாற் காய்ந்தார் போலுங்
குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலுங்
காலனைக் காலாற் கடந்தார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஆலானைந் தாட லுகப்பார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.7
218

கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
ஊழித்தீ யன்ன ஒளியார் போலும்
எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லு மிறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.8
219

கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியானுஞ் சதுர்முகனுந் நேட நின்ற
நீலநற் கண்டத் திறையார் போலும்
படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்
அடியார் புகலிடம தானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.9
220

திரையானுஞ் செந்தா மரைமே லானுந்
தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறிச் செல்வார் போலுங்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
காலத்தீ யன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.

6.21.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சுயம்புநாதவீசுவரர்,
தேவியார் - கட்கநேத்திராம்பிகை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page