6.19 திருவாலவாய் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

இசைப் பயிற்சி:-

Get the Flash Player to see this player.

இசை கேட்க:-

Get the Flash Player to see this player.

திருச்சிற்றம்பலம்

190

முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.1
191

விண்ணுலகின் மேலார்கள் மேலான் றன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்
கரந்துமையோ டுடனாகி யிருந்தான் றன்னைத்
தெண்ணிலவு தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.2
192

நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை
நிலமருவி நீரோடக் கண்டான் றன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் றன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் றன்னைக்
காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
கடுங்குரலாய் இடிப்பானைக் கண்ணோர் நெற்றித்
தீத்திரளைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.3
193

வானமிது வெல்லா முடையான் றன்னை
வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
கானமதில் நடமாட வல்லான் றன்னைக்
கடைக்கண்ணால் மங்கையுமை நோக்கா வென்மேல்
ஊனமது வெல்லா மொழித்தான் றன்னை
உணர்வாகி அடியேன துள்ளே நின்ற
தேனமுதைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.4
194

ஊரானை உலகேழாய் நின்றான் றன்னை
ஒற்றைவெண் பிறையானை உமையோ டென்றும்
பேரானைப் பிறர்க்கென்று மரியான் றன்னைப்
பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை
அருமறையான் நான்முகனு மாலும் போற்றுஞ்
சீரானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.5
195

மூவனை மூர்த்தியை மூவா மேனி
உடையானை மூவுலகுந் தானே யெங்கும்
பாவனைப் பாவ மறுப்பான் றன்னைப்
படியெழுத லாகாத மங்கை யோடும்
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.6
196

துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத்
துன்பந் துடைத்தாள வல்லான் றன்னை
இறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை
எல்லி நடமாட வல்லான் றன்னை
மறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை
மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்
சிறந்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.7
197

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் றன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
சேயானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.8
198

பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் றன்னைப்
பழியிலியாய் நஞ்சமுண் டமுதீந் தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை
வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை
மேலாய தேவாதி தேவர்க் கென்றுந்
திகைச்சுடரைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.9
199

மலையானை மாமேறு மன்னி னானை
வளர்புன் சடையானை வானோர் தங்கள்
தலையானை என்றலையின் உச்சி யென்றுந்
தாபித் திருந்தானைத் தானே யெங்குந்
துலையாக ஒருவரையு மில்லா தானைத்
தோன்றாதார் மதின்மூன்றுந் துவள வெய்த
சிலையானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.10
200

தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் றன்னைத்
தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் றன்னைப்
பரிந்தவற்குப் பாசுபத மீந்தான் றன்னை
ஆத்தனை அடியேனுக் கன்பன் றன்னை
அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6.19.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page