6.16 திருவிடைமருதூர் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

159

சூலப் படையுடையார் தாமே போலுஞ்
சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.1
160

காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங்
காரானை ஈருரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப் படுவார் போலும்
பத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்
சீரால் வணங்கப் படுவார் போலுந்
திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.2
161

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்
பூதங்க ளாய புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும்
பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
ஏதங்க ளான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.3
162

திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
பரங்குன்ற மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.4
163

ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
படுவெண் டலையிற் பலிகொள் வாரும்
மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்
ஏகம்ப மேயாரு மெல்லா மாவார்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.5
164

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.6
165

பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.7
166

தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆல மமுதாக வுண்டார் போலும்
அடியார்கட் காரமுத மானார் போலுங்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.8
167

பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.9
168

கொன்றையங் கூவிள மாலை தன்னைக்
குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி
நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
அன்றவ் வரக்கன் அலறி வீழ
அருவரையைக் காலா லழுத்தி னாரும்
என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.

6.16.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மருதீசர்,
தேவியார் - நலமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page