6.13 திருப்புறம்பயம் - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

127

கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.1
128

முற்றொருவர் போல முழுநீ றாடி
முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை
ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்
மற்றொருவ ரில்லைத் துணை யெனக்கு
மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.2
129

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன்றேந் திவந்
திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.3
130

பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப்
பனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர்
நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை
நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்
கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்
கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்
பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.4
131

செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.5
132

நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்ல புலியதள்மேல் நாகங் கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.6
133

மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு
திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.7
134

நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட் டியுங்
குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை
நல்லாலை நல்லூரே தவிரே னென்று
நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.8
135

விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.9
136

கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கின விநாய கனும்
பூவாய பீடத்து மேல யனும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

6.13.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர்,
தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page