6.12 திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

117

ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிரப் போவார்
தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.1
118

முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று
முன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை
பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
பிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக்
கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.2
119

நெளிவுண்டாக் கருதாதே நிமலன் றன்னை
நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
ஒருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக்
களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலிக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.3
120

பொடிநாறு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி
ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.4
121

விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
இறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்
கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
கழிப்பாலை யுள்ளுறையுங் கபாலப் பனார்
மண்ணானாய் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.5
122

விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.6
123

பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யாப்
பேதப் படுகின்ற பேதை மீர்காள்
இணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மணம்புல்கு மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.7
124

இயல்பாய ஈசனை எந்தை தந்தை
என்சிந்தை மேவி யுறைகின் றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்த மான
தியம்பகன் திரிசூலத் தன்ன கையன்
கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலிக்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.8
125

செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்
கற்றதோர் நூலினன் களிறு செற்றான்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.9
126

பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்
புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
கால்விரலா லூன்று கழிப்பா லையார்
வருதலங்க மாயக் குரம்பை நீங்க
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.

6.12.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்,
தேவியார் - வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page