6.02 கோயில் - புக்கதிருத்தாண்டகம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

11

மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார்போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்கு மிடமறியார் சால நாளார்
தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.1
12

நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்
பாகப் பொழுதெல்லாம் பாசூர்த் தங்கிப்
பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
வேதமும் வேள்விப் புகையு மோவா
விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
போகமும் பொய்யாப் பொருளு மானார்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.2
13

துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலுந்
தூமதியும் பாம்பு முடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்
மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
புறங்காட் டெரியாடிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.3
14

வாரேறு வனமுலையாள் பாக மாக
மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்
திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த
கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.4
15

காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
கபாலங்கை யேந்திக் கணங்கள் பாட
ஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும்
உத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்
சீரார் கழல்வணங்குந் தேவ தேவர்
திருவாரூர்த் திருமூலத் தான மேயார்
போரார் விடையேறிப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.5
16

காதார் குழையினர் கட்டங் கத்தார்
கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
முதலு மிறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ வன்று
மன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாட்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.6
17

இறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கு மென்றும் பிறவா தார்க்கும்
பெரியான்றன் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.7
18

குலாவெண் டலைமாலை யென்பு பூண்டு
குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லே றேறிக்
கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
கையோ டனலேந்திக் காடு றைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
நிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்
புலால்வெண் டலையேந்திப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.8
19

சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
சங்கரனைக் கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய வேறிப்
படுதலையி லென்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையுந் தாமு மெல்லாம்
மணியாரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்றி மணிவிளக்குப் பூதம் பற்றப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.9
20

பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்
பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்
வேதங்க ளோதியோர் வீணை யேந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

6.2.10
21

பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத்
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே.

6.2.11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Sixth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page