திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஐந்தாம் திருமுறை)

5.94 தொழற்பாலனம் என்னும் - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

925

அண்டத் தானை அமரர் தொழப்படும்
பண்டத் தானைப் பவித்திர மாந்திரு
முண்டத் தானைமுற் றாத இளம்பிறைத்
துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.1
926

முத்தொப் பானை முளைத்தெழு கற்பக
வித்தொப் பானை விளக்கிடை நேரொளி
ஒத்தொப் பானை ஒளிபவ ளத்திரள்
தொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.2
927

பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர்
வண்ணத் தானை வகையுணர் வான்றனை
எண்ணத் தானை இளம்பிறை போல்வெள்ளைச்
சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.3
928

விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப்
படலை யானைப் பலிதிரி வான்செலும்
நடலை யானை நரிபிரி யாததோர்
சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.4
929

பரிதி யானைப்பல் வேறு சமயங்கள்
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய
பிரிதி யானைப் பிறரறி யாததோர்
சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.5
930

ஆதி யானை அமரர் தொழப்படும்
நீதி யானை நியம நெறிகளை
ஓதி யானை உணர்தற் கரியதோர்
சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.6
931

ஞாலத் தானைநல் லானைவல் லார்தொழுங்
கோலத் தானைக் குணப்பெருங் குன்றினை
மூலத் தானை முதல்வனை மூவிலைச்
சூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.7
932

ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்
வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச்
சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள்
சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.8
933

நீற்றி னானை நிகரில்வெண் கோவணக்
கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை
ஆற்றி னானை அமரர்தம் ஆருயிர்
தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.9
934

விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்
கட்டிட் டானைக் கனங்குழை பாலன்பு
பட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ்
சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.10
935

முற்றி னானை இராவணன் நீண்முடி
ஒற்றி னானை ஒருவிர லாலுறப்
பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச்
சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.

5.94.11

திருச்சிற்றம்பலம்
Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page