திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

(ஐந்தாம் திருமுறை)

5.91 தனி - திருக்குறுந்தொகை

திருச்சிற்றம்பலம்

895

ஏயி லானையெ னிச்சை யகம்படிக்
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.

5.91.1
896

முன்னை ஞான முதற்றனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.

5.91.2
897

ஞானத் தாற்றொழு வார்சில ஞானிகள்
ஞானத் தாற்றொழு வேனுனை நானலேன்
ஞானத் தாற்றொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே.

5.91.3
898

புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடையேன்புனி தன்றமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.

5.91.4
899

மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையி னின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் றமர்களைக்
கொலைகை யானைதான் கொன்றிடு கிற்குமே.

5.91.5
900

கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.

5.91.6
901

மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே.

5.91.7
902

என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானுமு னேது மறிந்திலேன்
என்னைத் தன்னடி யானென் றறிதலுந்
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.

5.91.8
903

தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர்
உள்ளத் தேறல் அமுத ஒளிவெளி
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல்
வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே.

5.91.9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

5.91.10

திருச்சிற்றம்பலம்
Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page