|
875 |
ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்
ஒன்று கீளுமை யோடு முடுத்தது
ஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தே
ஒன்றி நின்றங் குறையும் ஒருவனே. | 5.89.1 |
876 | இரண்டு மாமவர்க் குள்ளன செய்தொழில்
இரண்டு மாமவர்க் குள்ளன கோலங்கள்
இரண்டு மில்லிள மானெமை யாளுகந்
திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே. | 5.89.2
|
877 | மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்
மூன்று மாயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே. | 5.89.3
|
878 | நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்
நாலு நன்குணர்ந் திட்டது மின்பமாம்
நாலு வேதஞ் சரித்தது நன்னெறி
நாலு போலெம் அகத்துறை நாதனே. | 5.89.4
|
879 | அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை
அஞ்சு போலரை யார்த்ததின் றத்துவம்
அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன்
அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே. | 5.89.5
|
880 | ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்
ஆறு சூடிய அண்ட முதல்வனார்
ஆறு கூர்மையர்க் கச்சம யப்பொருள்
ஆறு போலெம் அகத்துறை ஆதியே. | 5.89.6
|
881 | ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே. | 5.89.7
|
882 | எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்
எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை
எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே
எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே. | 5.89.8
|
883 | ஒன்ப தொன்பதி யானை யொளிகளி
றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே
ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே. | 5.89.9
|
884 | பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்
பத்து நூறவன் பல்சடை தோண்மிசை
பத்தி யாமில மாதலின் ஞானத்தாற்
பத்தி யானிடங் கொண்டது பள்ளியே. | 5.89.10
|