5.87 திருமணஞ்சேரி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

855

பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ்
சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.

5.87.1
856

துன்னு வார்குழ லாளுமை யாளொடும்
பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை யாயின ஓயுமே.

5.87.2
857

புற்றி லாடர வாட்டும் புனிதனார்
தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர்
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.

5.87.3
858

மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை
முத்தர் முக்குணர் மூசர வம்மணி
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம்
வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.

5.87.4
859

துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்
அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம்
வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே.

5.87.5
860

நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல்
ஊர்ப ரந்த உரகம் அணிபவர்
சீர்ப ரந்த திருமணஞ் சேரியார்
ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.

5.87.6
861

சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார்
விண்ணத் தம்மதி சூடிய வேதியர்
மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார்
வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.

5.87.7

862

துன்ன வாடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம்
மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.

5.87.8
863

சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் தேரமண் கையர் புகழவே
மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம்
அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.

5.87.9
864

கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்த வனெடு நீண்முடி பத்திறப்
படுத்த லுமணஞ் சேரி யருளெனக்
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.

5.87.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருள்வள்ளல்நாயகர், தேவியார் - யாழின்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page