5.86 திருவாட்போக்கி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

845

கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.

5.86.1
846

விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே.

5.86.2
847

வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
உந்தி யோடி நரகத் திடாமுனம்
அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார்
சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.

5.86.3
848

கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற்
தேற்றம் வந்து தெளிவுற லாகுமே
ஆற்ற வுமருள் செய்யும்வாட் போக்கிபால்
ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே.

5.86.4
849

மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே
ஆறு செஞ்சடை வைத்தவாட் போக்கியார்க்
கூறி யூறி உருகுமென் னுள்ளமே.

5.86.5
850

கான மோடிக் கடிதெழு தூதுவர்
தான மோடு தலைபிடி யாமுனம்
ஆனஞ் சாடி யுகந்தவாட் போக்கியார்
ஊன மில்லவர்க் குண்மையில் நிற்பரே.

5.86.6
851

பார்த்துப் பாசம் பிடித்தெழு தூதுவர்
கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே
ஆர்த்த கங்கை யடக்கும்வாட் போக்கியார்
கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே.

5.86.7
852

நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.

5.86.8
853

கட்ட றுத்துக் கடிதெழு தூதுவர்
பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே
அட்ட மாமலர் சூடும்வாட் போக்கியார்க்
கிட்ட மாகி யிணையடி யேத்துமே.

5.86.9
854

இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.

5.86.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இரத்தினகிரீசுவரர், தேவியார் - சுரும்பார்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page