|
841 |
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்
சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. | 5.85.1 |
842 | அரிய யன்றலை வெட்டிவட் டாடினார்
அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்
பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்
அரிய யன்றொழ அங்கிருப் பார்களே. | 5.85.2
|
843 | அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. | 5.85.3
|
844 | தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே. | 5.85.4
|
| இப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 5.85.5-10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.