5.81 திருப்பாண்டிக்கொடுமுடி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

806

சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.

5.81.1
807

பிரமன் மாலறி யாத பெருமையன்
தரும மாகிய தத்துவன் எம்பிரான்
பரம னாருறை பாண்டிக் கொடுமுடி
கரும மாகத் தொழுமட நெஞ்சமே.

5.81.2
808

ஊச லாளல்லள் ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப் பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனும் இத்தனை யல்லது
பேசு மாறறி யாளொரு பேதையே.

5.81.3
809

தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்ட லுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.

5.81.4
810

நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டுமிது கைகண்ட யோகமே.

5.81.5

இப்பதிகத்தில் 6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

5.81.6-10

இத்தலம் கொங்கு நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர், தேவியார் - பண்மொழிநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page