5.78 திருக்கோடிகா - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

780

சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
எங்கி லாததோர் இன்பம்வந் தெய்துமே.

5.78.1
781

வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங்
கோடி காவனைக் கூறீரேற் கூறினேன்
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே.

5.78.2
782

முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்
தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார்
கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங்
கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே.

5.78.3
783

நாவ ளம்பெறு மாறும னன்னுதல்
ஆம ளஞ்சொலி அன்புசெ யின்னலாற்
கோம ளஞ்சடைக் கோடிகா வாவென
ஏவ ளின்றெனை ஏசுமவ் வேழையே.

5.78.4
784

வீறு தான்பெறு வார்சில ராகிலும்
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேற்
கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால்
ஏறு வேனும்மால் ஏசப் படுவனோ.

5.78.5
785

நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி யேசற வுந்தெரி யாததோர்
கோடி காவனைக் கூறாத நாளெலாம்
பாடி காவலிற் பட்டுக் கழியுமே.

5.78.6

இப்பதிகத்தில் 7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

5.78.7-9
786

வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை
அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென
இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே.

5.78.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page