|
770 |
பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங்
கூரி தாய அறிவுகை கூடிடுஞ்
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
நாரி பாகன்றன் நாமம் நவிலவே. | 5.77.1 |
771 | என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள்
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே. | 5.77.2
|
772 | பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ்
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே. | 5.77.3
|
773 | மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்றன் அடியடைந் துய்ம்மினே. | 5.77.4
|
774 | எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே. | 5.77.5
|
775 | தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. | 5.77.6
|
776 | வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே. | 5.77.7
|
777 | குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. | 5.77.8
|
778 | பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. | 5.77.9
|
779 | பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே. | 5.77.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செந்நெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.