|
761 |
திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங்
கருவ னாகி முளைத்தவன் கானூரிற்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே. | 5.76.1 |
762 | பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
உண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள்
கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப்
புண்ட ரீகப் பொதும்பி லொதுங்கியே. | 5.76.2
|
763 | தாயத் தார்தமர் நன்னிதி யென்னுமிம்
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன் கானூர் முளையினை
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே. | 5.76.3
|
764 | குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்
நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்
செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே. | 5.76.4
|
765 | பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை
மெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள்
சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்
அத்தன் பாத மடைதல் கருமமே. | 5.76.5
|
766 | கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்
செல்வ மல்கு திருக்கானூ ரீசனை
எல்லி யும்பக லும்மிசை வானவர்
சொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே. | 5.76.6
|
767 | நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங்
காரு மாருதங் கானூர் முளைத்தவன்
சேர்வு மொன்றறி யாது திசைதிசை
ஓர்வு மொன்றில ரோடித் திரிவரே. | 5.76.7
|
768 | ஓமத் தோடயன் மாலறி யாவணம்
வீமப் பேரொளி யாய விழுப்பொருள்
காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே. | 5.76.8
|
| இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 5.76.9
|
769 | வன்னி கொன்றை எருக்கணிந் தான்மலை
உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல்
தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன்
கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே. | 5.76.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.