5.75 திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஐந்தாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்

751

மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.

5.75.1
752

கட்டா றேகழி காவிரி பாய்வயல்
கொட்டா றேபுன லூறு குரக்குக்கா
முட்டா றாவடி யேத்த முயல்பவர்க்
கிட்டா றாவிட ரோட எடுக்குமே.

5.75.2
753

கைய னைத்துங் கலந்தெழு காவிரி
செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்
கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா
ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

5.75.3
754

மிக்க னைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா
நக்க னைநவில் வார்வினை நாசமே.

5.75.4
755

விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி
இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக்
கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா
இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.

5.75.5
756

மேலை வானவ ரோடு விரிகடல்
மாலும் நான்முக னாலுமளப் பொணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்
பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.

5.75.6
757

ஆல நீழ லமர்ந்த அழகனார்
கால னையுதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்
பால ருக்கருள் செய்வர் பரிவொடே.

5.75.7
758

செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்க ரையரெம் மாதிபு ராணனார்
கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

5.75.8
759

உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர்
கரிய கண்டன் கழலடி தன்னையே
குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.

5.75.9
760

இரக்க மின்றி மலையெடுத் தான்முடி
உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங்
குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா
வரத்த னைப்பெற வானுல காள்வரே.

5.75.10

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கொந்தளக்கருணைநாதர், தேவியார் - கொந்தளநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete Fifth thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page