|
741 |
விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
கரும்பி னூறல்கண் டாய்கலந் தார்க்கவன்
இரும்பி னூறல றாததோர் வெண்டலை
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. | 5.74.1 |
742 | பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க்
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல்
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. | 5.74.2
|
743 | மருந்து வானவர் தானவர்க் கின்சுவை
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. | 5.74.3
|
744 | நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. | 5.74.4
|
745 | நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந்
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. | 5.74.5
|
746 | கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
திறம்பி யூர்வன மற்றும் பலவுள
குறும்பி யூர்வதோர் கூட்டகத் திட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே. | 5.74.6
|
747 | மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந்
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை
எறும்பி யூரரன் செய்த இயற்கையே. | 5.74.7
|
748 | இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு
துன்ப மும்முட னேவைத்த சோதியான்
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க்
கின்ப னாகும் எறும்பியூ ரீசனே. | 5.74.8
|
749 | கண்ணி றைந்த கனபவ ளத்திரள்
விண்ணி றைந்த விரிசுடர்ச் சோதியான்
உண்ணி றைந்துரு வாயுயி ராயவன்
எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே. | 5.74.9
|
750 | நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே. | 5.74.10
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எறும்பீசுவரர்,
தேவியார் - நறுங்குழல்நாயகியம்மை.